Monday, January 4, 2010

வேண்டாம்...வேண்டாம்..வேண்டாம்..

இந்த தொகுப்பை வாசிக்கும் அனைவருக்கும் முதற்கண் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஒவ்வரு புதிய வருடம் ஜனனிக்கும் போதும், நம் மனதில் புதிய தீர்மானங்கள் உதயமாவது இயல்பு. நமக்கு என்ன வேண்டும், நாம் பிறருக்கு என்ன செய்ய வேண்டும், நம் கண்ணோட்டம், நம் வாழ்க்கைமுறை, நம் தொலைநோக்கு பார்வை, ஆகியவற்றை முன்னரே தீர்மானிக்கிறோம். முடிந்த வரை பின்பற்ற முனைகிறோம். இதுவெல்லாம் எனக்கு வேண்டும் என்று கடந்த புத்தாண்டு தினங்களில் உறுதி பூண்டேன். இந்த வருடம், ஒரு மாறுதலுக்காக, "எதுவெல்லாம் எனக்கு வேண்டாம்" என்பதை தீர்மானிக்கிறேன். இங்கே சமர்பிக்கிறேன். அது சரி... "நீ நினைப்பதெல்லாம் நடக்குமா" என்ற தாங்கள் கூற்றிற்கு நான் செவி சாய்க்காமல் இல்லை. அதே சமயம் "என் வாழ்க்கையை நான் தீர்மானிக்காமல் வேறு யார் தீர்மானிப்பார்" என்பதை இந்த எளியவன் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.

1. ஆயிரம் நண்பர்கள் சத்தியமாய் வேண்டாம். என்னை புரிந்துகொண்டவர் ஐவர் ஆயினும் ஆயுள் முழுக்க அவர்களே எனக்கு போதும் (உபயம்: கார்த்தி).

2. என்னிடம் சகஜமாய் பகடி செய்யும் எளிதான மனோபாவத்தை வளர்துகொண்டவர்கள், நான் பேணி பாராட்டும் "சகிப்புத்தன்மை" என்னும் அந்த அரிதான மனோபாவத்தை வளர்க்காத, எளிதில் முகம் சுளிக்கும், "வெளியில் மட்டும் உத்தமர்கள்" நிச்சயமாய் வேண்டாம்.

3. என் தொப்புள் கொடி உறவுகள் மீது மற்றொரு குண்டு மழை சத்தியமாய் வேண்டாம். தமிழராய் பிறந்ததை தவிர ஒரு பாவமும் செய்யாத என் மக்களுக்கு விடியல்எப்போது?

4. ஏடுகளில் மட்டுமே சக்தி கொண்டுள்ள "எல்லாம் வல்ல இறைவன்" சத்தியமாய் வேண்டாம். கறிக்கு உதவாத சுரைக்காய் இருந்தால் என்ன, இல்லா விட்டால் என்ன?

5. சொந்த மக்களுக்கு தண்ணீர் வசதி செய்து கொடுக்க வக்கில்லாமல், வெளிநாட்டு முதளிட்டளர்களுக்கு இரத்தின கம்பளம் விரிக்கும், இந்திய தேசத்தை முடிந்த வரை கெடுக்கும், வெட்கம் இல்லாத, புற்று நோயை விட வேகமாய் பரவிவரும் அரசியல் தலைவர்கள் சத்தியமாய் வேண்டாம்.

6. அமைதி, நீதி, நேர்மை என்று வெளியில் தவக்கோலம் பூண்டு, அதற்காக வெல்லமுடியாத பரிசுகளையும் வென்று, அதே சமயம் ரகசியமாய் "அரசியல் தீவிரவாதம்" செய்யும் அரசாங்கங்கள் இந்த மண்ணில் வேண்டாம். அத்தகையவர்கள் ஒன்றுகூடி தாங்கள் வீரத்தை பொறுத்திருந்து "நரகத்தில்" காண்பிக்கவும். இந்த மண் மனிதர்களுக்கு. எளிய மக்களுக்கு.

7. தன் வாழ்க்கைக்கு வழி செய்ய எண்ணில் அடங்கா உயிரினங்கள் அழிந்து செல்ல காரணமான "நாகரீக வளர்ச்சி" சத்தியமாய் வேண்டாம். இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டும் அன்று. மற்ற கண்ணுக்கு தெரியாத உயிர்களுக்கும் தான். ஆயிரம் வருடத்திற்கு முன்னர் வாழ்ந்த 99 விழுக்காடு உயிரினங்கள் தற்போது இல்லைஎன்பது சோகமான உண்மை.

8. அண்டத்தில் இருந்து பார்த்தால் அணுவாக தெரியும் அரசாங்கங்கள் , மற்ற நாடுகள் "அணு குண்டு" தயாரிக்க தம்மிடம் அனுமதி வாங்க வேண்டும் என்ற கேடுகட்ட வெளியுறவு கொள்கையை வளர்க்க வேண்டாம்.

மேற்கண்ட இந்த தீர்மானங்கள் நிறைவேற நான் இறைவனை நிச்சயமாக வேண்ட வில்லை என்பதை "ஆழமாக" இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.